உள்நாடு

நவம்பரில் கூடும் பாராளுமன்றம்- முக்கிய நிகழ்வுகள்

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அத்துடன், 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய, 2023 நவம்பர் 07 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 மணிக்கு தஸ்ஸனா பௌத்த சன்விதானய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.0 மணி வரை கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 நவம்பர் 08 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக (08 வினாக்கள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

2023 நவம்பர் 09 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனையடுத்து, 2023 ஆம் நிதியாண்டுக்கான 231.5 பில்லியன் ரூபாய் அனுமதியைப் பெறுவதற்கு 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு முன்வக்கப்படவுள்ளது.

 

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

2023 நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களை அடுத்து தனியார் உறுப்பினர் சட்டமூலமான உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தல்) சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான பாராளுமன்றத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மாகாணசபைத் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் என்பன இரண்டாம் மதிப்பீடுக்காக முன்வைக்கப்படவுள்ளது.

 

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப்பொறுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

 

விவாதத்தை அடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

 

வரவுசெலவுத்திட்ட விவாதம்

 

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவுசெலவுத்திட்ட உரை’ பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.

 

அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதன விவாதம் இடம்பெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்-வஜிர