(UTV | கொழும்பு) –
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (27) முர்து பெர்னாண்டோ, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினார்.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷான் டயஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க நவம்பர் 23ஆம் திகதிக்கு அழைப்பு விடுக்க உத்தரவிட்டது.
கனிஷ்க சந்தருவன் உள்ளிட்ட மூன்று உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர்தரப் பரீட்சையின் அளவுகோல்களின் படி, தங்களுக்கு 495 நாட்கள் படிப்புக் காலம் உள்ளது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், நாட்டில் நிலவிய மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு மோசமான காரணங்களால், இந்த ஆண்டு 300 நாட்களாக படிப்பு காலம் வரையறுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து பாடத்திட்டங்களையும் முடிக்க முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த நிபந்தனையின் கீழ் உயர்தரப் பரீட்சை நடத்தினால், தங்களுக்கு பாரிய அநீதி ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த பரீட்சையை மேலும் ஒத்திவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්