உள்நாடு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் – கஞ்சன விஜேசேகர!

(UTV | கொழும்பு) –

 

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர ,
மின் கட்டணத் திருத்தத்துக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் கடந்த வாரம் மின்சார சபைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல்,எதிர்வரும் சில மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை சுமார் 18 % சதவீதத்தினால் அதிகரித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவை எட்டியது. எந்தவொரு அரச நிறுவனமும் திறைசேரியின் ஊடாக பணத்தைப் பெற்று அதன் நட்டத்தை ஈடுகட்ட முடியாது. அதன்படியே, மின்சார சபைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் விசேட விலைச் சூத்திரம் தயாரிக்கப்பட்டது.

மின்சார சபை மின் கட்டணத்தை ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால்,அவசர நிலைமையில் மின் கட்டணத் திருத்தத்தைக் கோரும் உரிமை மின்சார சபைக்கு உள்ளது. அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த முறையைப் பயன்படுத்தியே இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்ட மூலம், சட்ட வரைஞர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞர் அலுவலகம் அதனை ஆய்வு செய்த பின்னர் அதனை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது. அதற்கான பணிகளை இந்த வாரத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக கடந்த செவ்வாய்கிழமை சட்டமா அதிபர் எனக்கு அறிவித்தார். அதன் பின்னர் அடுத்த வாரம் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

மேலும், தற்போது மழைவீழ்ச்சி அதிகமாக உள்ளதால் இந்தக் கட்டணத் திருத்தம் தேவையா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம் உட்பட காலி மற்றும் கம்பஹா மாவட்டங்கள் என்பன அதிக மழை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொண்டன. ஆனால் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சமனலவெவ, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல ஆகிய பிரதான நீர்த்தேக்கங்கள் உள்ள பிரதேசங்களில் வழமையான மழைவீழ்ச்சியை இம்முறை நாங்கள் காணவில்லை.
இன்றைய நிலவரப்படி, நமது நீர்த்தேக்கங்களின் கொள்ளளவில் 65.81% மட்டுமே மின் உற்பத்திக்காக பயன்படுத்த முடியுமாக உள்ளது. கடந்த வருடங்களுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022 ஒக்டோபர் 22 ஆம் திகதி, அப்போது நீர்த்தேக்கங்களின் அளவு 84.41% ஆக இருந்தது. அதன்படி, நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவில் சுமார் 20% வீத வித்தியாசம் உள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டு நமது நீர்த்தேக்கங்களில் இருந்து 5364 ஜிகாவோட் மணிநேர நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், 5639 ஜிகாவோட் மணிநேர நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி வரை 2893 ஜிகாவோட் மாத்திரமே உற்பத்தி செய்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஜிகாவோட் அளவு அரைவாசிதான். அதன்படி, இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 70 நாட்கள் மாத்திரமே உள்ளன. தற்போது அந்தப் பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், இன்னும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அதன்படி, எஞ்சிய மின்சாரத் தேவையை மாற்று வழிகள் மூலம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.” என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அஜித் பிரசன்னவுக்கு பிணை

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி