(UTV | கொழும்பு) –
வட, கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுவரும் இன, மத, கலாசார மறு உருவாக்க நடவடிக்கைகள் சுமுகமாக முடிவடையாது என்பதையே இலங்கை மற்றும் உலக வரலாறு உணர்த்துவதாக நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மையின சிங்களவர்களின் குடியேற்றங்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் வலியறுத்தி கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இவ்விவகாரம் ஆராயப்பட்டதையடுத்து, பண்ணையாளர்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அதே தினத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பங்கேற்புடன மயிலத்தமடு, மாதவனை பகுதியில் புதிய புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது.
இச்சம்பவத்தை விபரிக்கும் ‘எக்ஸ்’ தளப்பதிவொன்றை (டுவிட்டர் பதிவு) மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் செய்திருக்கும் பதிவிலேயே நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். ‘வட, கிழக்கு மாகாணங்களில் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுவரும் இன, மத, கலாசார மறு உருவாக்கத்தை முன்னிறுத்திய இவ்வாறான நடவடிக்கைகள் சுமுகமாக முடிவடையாது என்பதையே இலங்கையினதும், ஏனைய உலகநாடுகளினதும் வரலாறு உணர்த்துகின்றது’ என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், ‘தீயணைப்பாளர்கள் எவரும் இல்லாத மிகவும் வறண்ட பகுதியில் ஏராளமான தீக்குச்சிகள் எரிகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්