(UTV | கொழும்பு) –
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கிச் செல்வதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். யாரும் எதிர்பாராத அந்தத் தாக்குதல் இஸ்ரேலை மிகக் கடுமையான பதில் தாக்குதலுக்குத் தூண்டியது. இதற்கு முன்னரும்கூட காசாவிலிருந்து ஹமாஸ் தாக்குவதும் இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் நடந்துள்ளது. ஆனால் இந்த முறை தாக்குதல் தொடங்கி 9 நாட்களில் காசாவில் 2300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
ஹமாஸுக்கு முடிவு கட்டுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீனர்களும் வடக்கிலிருந்து வெளியேற இஸ்ரேல் தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் கார்கள், ட்ரக்குகள், கழுதை வண்டிகள் என மக்கள் சாரைசாரையாக நகரின் தெற்கு நோக்கி நகர்கின்றனர்.
இது குறித்து ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், இஸ்ரேல் எச்சரிக்கையால் காசாவில் பெருமளவில் மக்கள் இடம் பெயர்தல் நடக்கிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி இன்றுவரை லட்சக்கணக்கானோர் காசாவுக்குள்ளேயே ஓரிடம்விட்டு இன்னொரு இடத்துக்குப் பெயர்ந்துள்ளனர். அதுவும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இது மிகவும் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு 11 மணியளவு நிலவரத்தின்படி 4,23,378 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 64 சதவீதம் பேர் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் ஆதரவு அமைப்புகளின் பாதுகாப்பில் உள்ளனர். ஐ.நா. சார்பில் 102 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் 33,054 பேர் தஞ்சமடைந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் உயிருக்கு அஞ்சி 1,53,000 பேர் காசாவுக்குள்ளேயே வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්