(UTV | கொழும்பு) –
இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில் ‘வை’ ரகப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது இப்போது நாட்டின் தலைவருக்கு ஒத்ததாக ‘இஸட்’ ரகத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு டசினுக்கும் குறையாத கொமாண்டோக்கள் எந்நேரமும் அவரைச் சூழ வியூகம் வகுத்து நிலைகொண்டிருப்பர். அவரது பாதுகாப்பு ஆறு அடுக்கு வளையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வழமையான பாதுகாப்புக்கு மேலதிகமாக சி.ஆர்.பி.எவ். ஜவான்களின் விசேட பாதுகாப்பு வளையமும் வழங்கப்பட்டுள்ளது. அவரது நகர்வுகள், போக்குவரத்துக்கள் மிக இரகசியமாக பேணப்படும் என்றும், அவர் பிரசன்னமாகக் கூடிய இடங்கள் துல்லியமான கவனிப்புக்கு உள்ளாகும் என்றும், அவரது பாதுகாப்புக்காக விசேட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்து சமுத்திர எல்லைப்புற நாடுகளின் மாநாடு இவ்வாரம் கொழும்பில் நடைபெற்றது.
அதில் கலந்துகொள்வது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் நேரத்துடனான ஏற்பாடாகும். தவிர்க்க முடியாமல் அதற்கு அவர் வருகை தந்தாலும், ஒரே நாளில் இலங்கை விடயத்தைச் சுருக்கிக் கொண்டு அவர் புதுடில்லி திரும்பியமைக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளே காரணம் என்று கூறப்படுகின்றது.
இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து, எப்போதும் இஸ்ரேலோடு இந்தியா துணை நிற்கும் என்ற முடிவை புதுடில்லி அறிவித்தமையை அடுத்து, இந்தியாவின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் சீற்றம் அதிகரித்திருக்கலாம் என்று கருதப்படும் சூழலிலேயே ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு திடுதிப்பென அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්