(UTV | கொழும்பு) – ‘அபே ஜன பல பக்ஷய’வில் இருந்து அத்துரலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அத்துரலிய ரத்ன தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹார, ஜனக் டி சில்வா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாமினால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அபே ஜன பல பக்ஷயவின் ஒழுக்காற்றுக்குழுவானது அத்துரலிய ரத்ன தேரரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்வதாக 2021 ஒக்டோபர் 15 என்ற திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், அத்துரலிய ரத்ன தேரர் சார்பில் நேற்றைய தினம் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அபே ஜன பல பக்ஷயவின் ஒழுக்காற்றுக்குழுவுக்கு இல்லை என்றும், ஏனெனில் அவர் ‘விஜய தரணி ஜாதிக சபாவ’ என்ற அமைப்பின் தலைவர் எனும் அடிப்படையிலேயே கட்சியில் இணைந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர் குழாம், ‘அபே ஜன பல பக்ஷய’வில் இருந்து அத்துரலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டத்துக்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්