(UTV | கொழும்பு) –
இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார தெரிவித்தார். இதற்காக அனைத்து அரச அதிகாரிகள், மக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, “நாட்டில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின்போதும் பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தடைகளின்றி தமது வாக்குகளை அளிக்கக் கூடிய வகையில் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும் மாற்றுத் திறனாளிகளுக்காக விசேட அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
மேலும், வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் மையை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் செலவாகின்றது. தற்போது தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பில் முறைகேடுகளை செய்ய முடியாது. எனவே, தேர்தலுக்கான செலவினங்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதில்லை. அதனால் பொதுமக்கள் தமக்கு அவசியமான சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் முறையற்ற விதத்தில் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்படுவதாக கடந்த காலங்களில் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்களும் இந்த மாகாண சபைகள் மீது சுமத்தப்பட்டன. அரச நிதி வீணடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
எனவே, எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மாகாண சபைகளுக்கு நிதி வழங்குவதற்கு முறையான புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகின்றது. அது தொடர்பில் எமது குழு கலந்துரையாடிவருகின்றது. வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காகவும் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் அனைத்து தரப்பினரினதும் ஆலோசனைகளுடன் கூடிய வழிகாட்டல்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக துறைசார் வல்லுநர்கள், கல்வியியலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு நிபுணர்களிடம் குழு கலந்துரையாடி வருகின்றது.
நாட்டில் இடம்பெறும் விடயங்கள் குறித்து முறையான விசாரணையின்றி அதன் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதிப்படுத்த முன்னரே முறையற்ற விதத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் அவை பகிரப்படுகின்றன. இதன் காரணமாக நாட்டில் மோதல்கள் உட்பட பல அசம்பாவிதங்கள் இடம்பெறுவது மாத்திரமன்றி சமூக அந்தஸ்துள்ள பலரின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்படுகின்றது. எனவே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முறையான பொறிமுறையொன்று அவசியமாகும்.
மேலும், பொலிஸார் உரிய முறையில் தமது பணிகளைச் செய்கிறார்களா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிமுறை கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்ப சில தந்திரங்களைக் கையாண்டு நேர்மையுடன் செயல்பட்டால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு ஊடக நிறுவனங்களின் ஆதரவும் தேவை. ஊடகங்களும் சரியான பொறுப்புணர்வோடு செயற்பட்டால் இந்த நாட்டிற்கு ஒரு பாரிய பணியை செய்ய வாய்ப்பு உள்ளது. ” என்றும் ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්