(UTV | கொழும்பு) –
சீதா என்ற யானை மீது ரப்பர் தோட்டாக்களால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுக்குமாறு பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை விகாரையில் வருடாந்த பெரஹெராவில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் யானைகள் கலந்துகொள்வதால், அப்பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், அதனை விரட்ட குழுவொன்றை அமைக்குமாறு மஹியங்கனை விகாரையால் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையின் பிரகாரம் வனஜீவராசிகள் திணைக்களத்தில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதி அதிகாலை 3.15 மணியளவில் மகாவலி ஆற்றுக்கு அருகில் சீதா என்ற யானை கட்டப்பட்டிருந்த நிலையில் அதனை காட்டு யானை என நினைத்து சுடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் உள்ளக ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், கடமையில் ஈடுபட்டுள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒழுங்கீனமாக செயற்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්