(UTV | கொழும்பு) –
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை அமைச்சரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் சமர்ப்பித்துள்ளார்.
பல்வேறு காலகட்டங்களில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்களை பாதுகாத்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு சுமார் 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் தீர்வுகள், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் குறித்து ஆராய்ந்து அதற்கான இடைக்கால அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான வழிகளை இடைக்கால அறிக்கை ஆராய்ந்து, இது தொடர்பாக சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகள் மற்றும் குடியுரிமைக்கான சட்டப் பாதைகள் குறித்த முக்கிய பரிந்துரைகள் இந்த இடைக்கால அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. “கடந்த இரண்டு ஆண்டுகளாக முகாம்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்து, இது சம்பந்தமாக நீதித்துறையின் மதிப்பிட்டுகளுடன் இந்த பரிந்துரைகளை செய்துள்ளோம்” என ஆலோசனை குழுவின் சட்ட நிபுணர் மனுராஜ் சுண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
குழுவானது குடியுரிமைக்கான பாதைகள், தமிழ்நாட்டில் இந்திய சமூகத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கான படிகள் மற்றும் திருப்பி அனுப்பும் படிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கை தமிழகத்தில் குடியுரிமையின்றி வாழும் இலங்கையில் இருந்து சென்ற 5,000 இற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குழுவின் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் செயலாளர் சூரியகுமாரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්