(UTV | கொழும்பு) –
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா 13 வருடங்களுக்கு முன்னர் அக்காபல்கோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்வைத்த யோசனைக்கு அமைய 19ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் பட்டாசுகளின் பயன்பாடு நீக்கப்பட்டிருந்தது.
ஆனால், டிஜிட்டெல் சுடர்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை.
விளையாட்டு விழாக்களின் ஆரம்பம் மற்றும் முடிவு வைபவங்களில் பட்டாசுகளின் பயன்பாட்டை குறைக்குமாறு அல்லது முற்றாக தடை செய்யுமாறு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா முன்வைத்த யோசனை ஹங்ஸோ 2022 ஆசிய விளையாட்டு விழாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13 வருடங்களுக்கு முன்னர் தான் முன்வைத்த யோசனை நிறைவேற்றப்பட்டதையிட்டு இலங்கையர் என்ற வகையில் பெருமை அடைவதாக மெக்ஸ்வெல் டி சில்வா கூறினார். 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கான தொடக்க விழா ஹங்ஸோவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றபோது ஆசிய விளையாட்டு விழா தீபத்தை ஒரு பெரிய டிஜிட்டல் மனிதனுடன் இணைந்து ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் வாங் ஷுன் ஏற்றிவைத்தார். தொடக்க விழாக்களில் வானவேடிக்கைகளின் பாரம்பரிய பயன்பாடு இடம்பெறவில்லை. பட்டாசு வெடிகள் காட்சியைக் கண்டுபிடித்த நாடுகளுக்கு குறிப்பாக சீனாவுக்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் அரங்கில் திரண்டிருந்த 50,000 பார்வையாளர்களையும் தொலைக்காட்சிகளில் ஆரம்ப விழா வைபவத்தை பார்வையிட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சீன பட்டாசுகள் வெடிக்காதபோதிலும் போட்டிகளின் முதலாம் நாளான ஞாயிற்றுக்கிழமை சீன விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கங்களில் மிதந்து அசத்தினர். முதல் நாளன்று வழங்கப்பட்ட முதலாவது தங்கப் பதக்கங்களை வரவேற்பு நாடான சீனா சுவீகரித்தது. இரண்டு வாரங்கள் நீடிக்கவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் படகோட்டம், குறிபார்த்து சுடுதல், வூஷு ஆகிய நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட முதலாவது தங்கப் பதக்கங்களை சீனர்கள் தமதாக்கிக்கொண்டனர்.
இரட்டை துடுப்பு படகோட்டப் போட்டியிலேயே சீனாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்தது. அப் போட்டியில் ஸூ ஜியாக்கி, கியு ஸியுபிங் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து முதலாதம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
தொடர்ந்து பதக்க மழையில் மிதந்த சீனா முதலாம் நாள் போட்டிகள் நிறைவில் 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் இருந்தது. தென் கொரியா, ஜப்பான், ஹொங் கொங் சீனா, உஸ்பெகிஸ்தான், சைனீஸ் தாய்ப்பே ஆகியன தங்கப் பதக்கங்கள் வென்ற ஏனைய நாடுகளாகும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්