(UTV | கொழும்பு) –
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், விந்தையாகவும் இருப்பதால்தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வௌ்ளிக்கிழமை (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது பற்றித் தெரிவித்ததாவது,
“ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட கொலைவெறிதான் ஈஸ்டர் தாக்குதல். இத்தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து வெளியாகி வரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சனல் 04 அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு உடன் நிராகரித்தமை இச்சந்தேகத்தை வலுவூட்டுகிறது.
எனவே, தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட என் போன்ற நிரபராதிகளுக்காகவும் இந்த ஈஸ்டர் தாக்குதலை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி உண்மைகளைக் கண்டறிய வேண்டும்.
அரசாங்கத்திலிருப்பவர்கள் விசாரணை நடத்தி இந்த உண்மைகளைக் கண்டறிய முடியாது. இந்த அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷ 2014இல் பொதுபல சேனாவின் அலுவலகத்தை காலியில் திறந்து வைத்ததிலிருந்து இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
பெஷன்பக்கை எரித்தமை, மாவனல்லை சிலை உடைப்பு உள்ளிட்ட முஸ்லிம் விரோதப் போக்குகள் இதற்காகவே கட்டவிழ்க்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை தவறாக வழிநடத்த எடுக்கப்பட்ட தீர்மானங்கள்தான் இவை. இந்த வரலாற்றுச் சான்றுகளை மறைப்பதற்காக இவர்கள் எடுக்கும் பிரயத்தனம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட வைக்கிறது. இதனால்தான், எங்களது சந்தேகங்களும் வலுக்கிறது.
சாய்ந்தமருதில் தற்கொலை செய்து பலியானோர் 16 பேர் என அறிவித்தனர். 2020, 2021, 2022 களில் வெளியான டீ.என்.ஏயில் சாரா கொல்லப்படவில்லை என்றனர். 2023 டி.என்.ஏ. சாய்ந்தமருதில்தான் சாராவும் கொல்லப்பட்டார் எனக் கூறுகிறது. அங்கே 17 சடலங்கள் மீட்கப்பட்டதா? இல்லையே!
குண்டு வெடித்த பின்னர் காலில் படு காயங்களுடன், பெண்டேச் கட்டியவாறு தன்னுடன் வீடியோ தொலைபேசியில் சாரா பேசியதாக அவரது தயார் கூறியுள்ளார். சஹ்ரானின் மனைவியும் இத்தாக்குதலிலிருந்து சாரா தப்பியதாக ஜனாதிபதி ஆணைக் குழுவில் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
ஈஸ்டர் குண்டு வெடிக்கும் வரைக்கும் சஹ்ரானைத் தெரியாது என்கின்றனர் புலனாய்வுத் துறையினர். ஆனால், 2012 லிருந்து சஹ்ரானுக்கு பாதுகாப்பு அமைச்சால் சம்பளம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அபுஹின்த் என்பவருடன் அடிக்கடி சஹ்ரான் பேசியதாக வாக்குமூலம் வழங்கப் பட்டுள்ளது. இந்த தாக்குதலை அவசரமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் துரிதப்படுத்தியதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அபுஹின்த்? இவர் இதுவரை கைது செய்யப்படவில்லை ஏன்?
விசாரணைகளில் அக்கறை செலுத்திய அதிகாரிகள் இடமாற்றம் அல்லது பதவியிறக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். சொனிக் என்பவர் பற்றி விசாரணை நடத்துவதிலிருந்து ஐ.பி பண்டார தடுக்கப்பட்டுள்ளார். ஐ.பி. ஜெயசிங்கவுக்கு கொரோனா எனக்கூறி உயிருடனே கொளுத்தியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள்தான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தாக்குதலுக்குப் பின்னர், கம்பளையில் சாதிக் ஹக் என்பவரைக் கைது செய்து கொழும்புக்கு அழைத்து வருகையி்ல், தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.ஐ.டி. யினர் கூறியுள்ளமையும் தெரியவந்துள்ளது. மாத்தளை சி்ன்ன சஹ்ரான் என்பவரிடம், இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்தியதாகக் கூறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஐம்பது வீத வெற்றியீட்டியவர்களுக்கு தாக்குதல் ஏன் அவசியம் எனக் கேட்கி்ன்றனர். இத்தேர்தலில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐம்பது வீதத்தையும் பெறவில்லை எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவைகள் எல்லாம் செய்தவர்களை தப்பிக்கச் செய்வதற்கான, திசை திருப்பும் முயற்சிகள் இவை. இவ்வாறு கொலைவெறியில் அடித்தளமிட்டு ஆட்சிக்கு வந்த கோட்டபாயவை இரண்டு வருடங்களிலே மக்கள் துரத்திவிட்டனர். இருந்தாலும் இவர்களின் செல்வாக்கு இன்னும் இந்த அரசாங்கத்தில் உள்ளது. எனவே, சர்வதேச விசாரணை நடத்தினாலே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம், தண்டிக்கலாம்
சுரங்கம் தோண்டுவதற்கான அனுமதியை எனது அமைச்சு வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்தார். இதுவரை காலமும் என்வசம் இருந்த எந்த அமைச்சுக்கும் இவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டதில்லை. இஸ்லாத்தை நிந்திக்கும் கருத்துக்கள், ஜம்இய்யதுல் உலமா குறித்த விமர்சனங்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேசம் பற்றிய அவதூறுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் சகாக்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடிக்கவில்லை. சாய்ந்தமருது மக்களே படையினருக்கு தெரியப்படுத்தினர்” என்றும் அவர் தெரிவித்தார்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්