(UTV | கொழும்பு) –
பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் 10ம் வகுப்பில் கல்வி கற்று வரும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி 8 மணி 30 நிமிடங்களில் 54km தூரத்தினை நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். நாவலப்பிட்டிய காவல் நிலையத்தின் முன்னால் காலை 06:05 மணிக்கு தொடங்கப்பட்ட சோழன் உலக சாதனை படைப்பதற்கான நடைப் பயணம், கினிகத்தோன, வட்டவளை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலாவ நகரங்கள் ஊடாக, பகல் 02 மணி 35 நிமிடங்களில் பொகவந்தலாவை சென் மேரிஸ் தேசிய கல்லூரியில் நிறைவடைந்தது.
அதிக ஏற்றக் கோணம் கொண்ட மலையகப் பாதையில் இவர் எந்தவித ஓய்வும் இன்றி நடந்து சோழன் உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வுலக சாதனை முயற்சியை தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்தார்கள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் மற்றும் கண்டி மாவட்டப் பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் போன்றோர்.
சோழன் உலக சாதனைப் படைத்த மாணவிக்கும் அவரது மூன்று சகோதரிகளுக்கும் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சோழன் உலக சாதனை படைத்த மாணவியை கல்லூரியின் தலைமை ஆசிரியர் வேலுசாமி அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්