(UTV | கொழும்பு) –
அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்தி அப்பகுதியிலிருந்து சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அறுகம்பை பகுதியை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போது அறியப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. அதற்கமைய இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதோடு, அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்தற்காக துறைசார் நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத்துறை திட்டமும் வெளியிடப்பட்டதோடு, மூன்று வருடங்களுக்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதியின் கருத்தறிவதற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
மேற்படிச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஒரு மாதத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் துறைசார் நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්