(UTV | கொழும்பு) –
கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறுவதற்காக தனது சொந்த ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)’இலஞ்சம்’ வழங்கியதாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெரிக்கப் பாராளுமன்றக் குழுவிடம் அண்மையில் சாட்சியம் அளித்துள்ளார். சி.ஐ.ஏ பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸுக்கு, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு தெரிவுக்குழுக்களின் தலைவர்கள் எழுதிய கடிதத்தில் இச்சாட்சியம் குறித்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான உப தெரிவுக்குழுத் தலைவர் பிரெட் வென்ஸ்ட்ரப், புலனாய்வு தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் மைக் டேர்னர் ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். “பல தசாப்தகால அனுபவமுடைய, சிரேஷ்ட தரத்திலான, தற்போதைய சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், மேற்படி பணக்கொடுப்பனவு தொடர்பான தகவல்கள் வழங்க முன்வந்தார்” என 12.-09-.2023 ஆம் திகதியிடப்பட்ட அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியின் தகவலின்படி “கொவிட்19 மூலம் குறித்து ஆராய்வதற்காக, விஞ்ஞான நிபுணத்துவம் கொண்ட, பல்துறை சார்ந்த, அனுபவம்மிக்க 7 அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை, தனது கொவிட் கண்டுபிடிப்பு அணிக்கு (Covid discovery team) சி.ஐ.ஏ. நியமித்தது.
அவர்களின் ஆய்வின் முடிவில், கொவிட் 19 ஆனது, சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடத்திலிருந்து தோன்றியது என அவ்வணியின் 6 அதிகாரிகள் நம்பினர். ஆனால், அவ்வணியின் மிகவும் சிரேஷ்ட அதிகாரி, கொவிட் 19 வைரஸ் ஆனது விலங்குகள் ஊடாக இயற்கையாக தோன்றியிருக்கலாம் என நம்பினார்.
அதன் பின்னர், ஏனைய 6 அதிகாரிகளும், அவர்களின் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதற்காக ‘குறிப்பிடத்தக்க பண ஊக்குவிப்புகள்’ வழங்கப்பட்டன என மேற்படி சாட்சி தெரிவித்துள்ளார்” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியில் குறைந்த நம்பிக்கையுடன் தானும் எந்தவொரு மதிப்பீட்டையும் சி.ஐ.ஏ. பகிரங்கமாக முன்வைக்கவில்லை. “நம்பகமானதாகத் தென்படும் மூலத்திலிருந்து வெளிவந்த இக்குற்றச்சாட்டுகளானவை, கொவிட்19 மூலம் குறித்த உள்ளக விசாரணைகளை சி.ஐ.ஏ. எவ்வாறு கையாண்டது என்பது குறித்து இத்தெரிவுக்குழுவை விசாரிக்கச் செய்கின்றன’ என பாராளுமன்றத் தெரிவுக்குழுத் தலைவர்கள் இருவரும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விசாரணைகளுக்காக, சி.ஐ.ஏ.யின் கொவிட் கண்டுபிடிப்பு அணியின் செயற்பாடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்கள், சி.ஐ.ஏயின் கொவிட்19 கண்டுபிடிப்பு அணி மற்றும் ஏனைய ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள், ஏனைய முகவரகங்களுக்கு இடையிலான, கொவிட்19 மூலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொடர்பாடல்கள், சி.ஐ.ஏவின் கொவிட்19 கண்டுபிடிப்பு அணியின் அங்கத்தவர்களுக்கான ஊதியம், செயற்பாட்டு அடிப்படையிலான கொடுப்பனவுகள், போனஸ் ஊக்கு விப்புகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளின் வரலாறு, போன்றவற்றை தமக்கு வழங்குமாறு சி.ஐ.விடம் மேற்படி தெரிவுக்குழுத் தலைவர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஆவணங்கள், விபரங்களை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சி.ஐ.ஏ.யின் பொது உறவுகள் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் டெம்மி குப்பேர்மன் தோர்ப், இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், “சி.ஐ.ஏ.யில் நாம், பகுப்பாய்வு கடினத்தன்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை ஆகியவற்றை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளோம். இக்குற்றச்சாட்டுகளை நாம் தீவிரமாக கருத்திற்கொள்வதுடன், அது குறித்து ஆராய்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 மூலம் தொடர்பான மேலும் தகவல்களை சீனா வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசுஸ் வலியுறுத்தியதுடன், இது குறித்து ஆராய்வதற்காக 2 ஆவது குழுவொன்றை அனுப்புவதற்கு அந்த ஸ்தாபனம் தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசெம்பர் மாதத்தில் கொரோனா எனும் கொவிட்19 நோய் பரவ ஆரம்பித்தது. இதுவரை சுமார் 70 இலட்சம் பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர் .
கொவிட்19 மூலம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்நாட்டின் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தார். எனினும், இவ்விடயத்தில் அமெரிக்காவின் பல்வேறு புலனாய்வு முகவரகங்களும் இவ்விடயத்தில் வெவ்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதை அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தியது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්