(UTV | கொழும்பு) –
அதிகளவான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் மனித கடத்தல் காரர்களை நம்பி ஏமாறாமல் , உறுதிப்படுத்தப்பட்ட தொழில் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓமானில் தொழில் வாய்ப்பின்றி சிக்கியிருந்த 32 புலம்பெயர் இலங்கை தொழிலாளர்கள் கடந்த 17ஆம் திகதி நாட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரோயல் ஓமன் பொலிஸாரின் குடிவரவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. புலம்பெயர்ந்தோர் தொழில் தேடும் எதிர்பார்ப்புடன் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வந்து, உரிய வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் சிக்கியிருந்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை மற்றும் சுற்றுலா விசாக்களில் வந்து,தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் அங்கு அதிக காலம் தங்கியிருப்பது பல தொழிலாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமானிய அதிகாரிகளின் ஆதரவுடன் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
ஓமானில் சிக்கித் தவிக்கும் 32 சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுக்களை ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் அடையாளம் கண்டுள்ளது.இந்நிலையில், அவர்களின் தேவைகள் தனித்தனியாக மதிப்பிடப்பட்டது. மேற்படி குழுவிற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் திருப்பி அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளுடன் விசா கால அவகாச அபராதத் தள்ளுபடியைப் பெறுவதில் தூதரகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தால் மருத்துவ உதவி, தங்குமிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இன்றி ஓமானுக்கு வர வேண்டாம் என ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து இலங்கையர்களையும் உரிமம் பெற்ற முகவரங்கள் ஊடாக மட்டுமே தொழில் தேடுமாறும் ஓமானுக்கு வருவதற்கு முன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யுமாறும் ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්