(UTV | கொழும்பு) –
இரண்டு மாகாணங்களை இணைக்க நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு தேவையில்லை, சாதாரண பெரும்பான்மை போதும் என்பது 25 வருடங்களாக நாடாளுமன்ற எம்.பியாக இருக்கும் ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
வடக்கு கிழக்கை இணைக்க மூன்றில் இரண்டு தேவை என்பதால் அது பற்றி முஸ்லிம் சமூகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி சொல்லி வருகிறார். அரசியல் யாப்பின் 154A 3ன் படி இரண்டு மாகாணங்களை ஏதோவொரு சட்டத்தினால் பாராளுமன்றால் இணைக்க முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
” (3) இச்சட்டத்தின் முந்தைய விதிகள் எதுவாக இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாகாண சபை, ஒரு ஆளுநர், ஒரு முதலமைச்சர் மற்றும் ஒரு நிர்வாகக் குழுவைக் கொண்ட இரண்டு அல்லது மூன்று அருகிலுள்ள மாகாணங்களுக்கு ஒரு நிர்வாகப் பிரிவை உருவாக்குவதற்கு, எந்தவொரு சட்டத்தின் கீழும் பாராளுமன்றம் வழிவகை செய்யலாம்.”
மேற்சொன்ன யாப்பு சட்டப்படி இரு மாகாணங்களை இணைக்க பாராளுமன்றில் மூன்றில் இரண்டு தேவைப்படாது என்பதை புரியலாம். இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சமூகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றால் ஏன் தமிழ் கட்சிகள் இணைப்பு விடயத்தில் கடுமையாக அலட்டிக்கொள்கின்றன என்பதற்கான பதிலை ஹக்கீம் சொல்வாரா?
இணைப்பு ஏற்படாது என்று சொல்வதை விட இணைப்பு ஏற்பட்டால் முஸ்லிம்கள் நிலை என்ன என சிந்தித்து அதற்கான முன் கூட்டிய பாதுகாப்பை சிந்திப்பதே புத்திசாலித்தனமாகும். வருமுன் காப்போன், வந்தபின் காப்போன் என்ற கதை கூட தெரியாமல் முஸ்லிம் சமூகம் இருக்க முடியாது. 1987ம் ஆண்டு நமக்கு தெரியாமலேயே வடக்கு கிழக்கும் இணைக்கப்பட்டதை கண்டும் ஹக்கீம் போன்றோர் இன்னும் உணரவில்லையா? ஆகவே, எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்காது பிரிந்த வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையாய் வாழ்வதே இன்றைய தேவையாகும் என்றார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්