அரசியல்உள்நாடு

“மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் வனஜீவராசிகள் திணைக்களம் “- ரிஷாட் பதியுதீன்

(UTV | கொழும்பு) –  மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானதுகையகப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மன்னார், முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என் மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

அண்மையில் முல்லைத்தீவிழும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் முசலிப் பிரதேசத்தில் எதுவுமே விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு கூறுகின்றார். 1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கூறுவதாக குறிப்பிட்டார்.

1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது, இன்று நாங்கள் மக்களுக்குக் கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கின்றது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது. ஆனால், சிலர் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை ஆணித்தரமாக தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோவிட் தடுப்பூசி தொடர்பான மற்றுமொறு முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா அமைச்சின் வாகன இறக்குமதியில் ஒருதலைபட்சம்!!

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளும் நீக்கம