(UTV | கொழும்பு) –
தொடங்கொடையில் நபர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, தொடங்கொடை டொலேலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 37 வயதான திமுத் சாமிக என்ற நபர் வெட்டுக்காயங்களுடன் கடந்த 14ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர், தனது மனைவியின் பெற்றோரின் வீட்டில் தங்கியிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று குறித்த நபரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில், அவர் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில், காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மத்துகமவில் உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவருடனான முரண்பாடே கொலைக்கான காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, கொலைக்கு உடந்தையாக இருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான புத்திக விஜேசிறி என்றழைக்கப்படும் ‘மால்திய’ மற்றும் 29 வயதுடைய விமுக்தி மதுசங்க எனும் ‘களு கயான்’ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான இருவர் மீது இதற்கு முன்னர் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் மத்துகமவில் இயங்கிவரும் போதைப்பொருள் வியாபாரியின் நெருங்கிய சகாக்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්