(UTV | கொழும்பு) –
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
காலநிலை மற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
துறைசார் முன்னோடிகள் நிபுணர்கள் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்காக ஒரு நாடு என்ற வகையில் கொண்டிருக்க வேண்டிய மூலோபாய திட்டம் குறித்து ஆராயப்பட்டது.
அனைத்து நடவடிக்கைளின் போதும் நிதி முக்கிய காரணியாக காணப்படுவதாகவும், காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த வகையில் வலுவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், காலநிலை மாற்றங்களை வெற்றிகொள்வதற்காக சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்கிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் நிறுவப்படவிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை சர்வதேச ஆய்வுக்கான கேந்திர நிலையமாக நடத்திச் செல்லும் அதேநேரம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தவது தொடர்பிலான இலங்கையின் அர்பணிப்பை அதனூடாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவது குறித்து கேம்பிரிஜ் உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான (COP 28) மாநாட்டில் முன்மொழியப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, சுற்றாடல், காலநிலை மற்றும் பசுமை நிதி தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆனந்த மல்லவதந்திரி, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலரும் இந் கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்தனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්