(UTV | கொழும்பு) –
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடர் குறித்த ஒழுங்கமைப்புக்கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் கூட்டத்தொடரின்போது ஏற்கனவே இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51ஃ1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் 46ஃ1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் என்பவற்றுக்கான ஆணை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.
இத்தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, எதிர்வரும் 54 ஆவது கூட்டத்தொடரில் இத்தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கை மீதான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாது. இருப்பினும் கடந்த ஜுன் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற 53 ஆவது மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரின்போது இலங்கை குறித்து பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்ட வாய்மொழிமூல அறிக்கையில் மிகவும் காட்டமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததன் காரணமாக, இம்முறை வெளியிடப்படவுள்ள எழுத்துமூல அறிக்கை இலங்கைக்கு மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுஇவ்வாறிருக்க இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தேசிய ரீதியில் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து விரிவான அறிக்கைகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්