(UTV | கொழும்பு) –
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. ஆகவே, 225 உறுப்பினர்களும் பொறுப்புடன் நாட்டுக்காக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பத்தரமுல்ல பகுதியில் உள்ள நவ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மறந்து விட்டு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்கு ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து தீர்வு காண முடியாது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சகல கட்சிகளும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். துரதிஷ்டவசமாக எந்த கட்சியும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. ஜனாதிபதி தேர்தல் குறித்து மாத்திரம் போட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கம் கட்சி தலைவர்களுக்கும், சுயாதீன உறுப்பினர்களுக்கும் உண்டு. ஆனால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கமும் அதற்கான திட்டமும் எவரிடமும் இல்லை. இதுவே உண்மை.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. நாட்டின் அரசியலமைப்பை பாதுகாத்து அதன் வழியில் செயற்படுவதாக அரச தலைவர் உட்பட 225 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்துள்ளார்கள். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் பிரதான அங்கமாக உள்ளது. ஆகவே 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக எவராலும் செயற்பட முடியாது. 13 ஆவது திருத்தத்தில் உள்ள குறைப்பாடுகளை திருத்திக் கொண்டு மாகாணங்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். 13 ஆவது திருத்தத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்க முடியாது. 09 மாகாணங்களுக்கும் 13 ஆவது திருத்தம் பயனுடையதாக அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் 13 ஆவது திருத்தம் சொந்தம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒருதரப்பினர் காலம் காலமாக இனவாத அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள். இளம் தலைமுறையினர் யதார்த்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது. ஆகவே 225 உறுப்பினர்களும் பொறுப்புடன் நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්