அரசியல்உள்நாடு

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.

(UTV | கொழும்பு) –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிச்சயிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதால் வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிதி நெருக்கடி காரணமாக வாக்கெடுப்பு பணிகளுக்கு தேவையான நிதியை விடுவிப்பது கடினம் என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.தற்போது நாட்டின் நிதி நிலைமை சீரான தன்மையில் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஆகவே வேட்பு மனுத்தாக்கல் செலுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி விடுவிப்பதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டு சுற்றறிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இரத்து செய்ய வேண்டும். வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.ஆகவே ஒன்று தேர்தலை நடத்த வேண்டும் அல்லது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைகயை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கவுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஷா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று தோற்றம் பெறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.ஆகவே கட்சி என்ற ரீதியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். நிதி நெருக்கடி காரணமாக வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.இதனால் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.குறிப்பாக அரச சேவையாளர்கள். வேட்புமனுத்தாக்கல் செய்து சுமார் நான்கு மாத காலமாக சம்பளமில்லாத விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்கள் தற்போது நிபந்தனைகளின் அடிப்படையில் அடிப்படை சம்பளத்துடன் அரச சேவையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்கும் வகையில் பிரதேச சபை,மாநாக சபை மற்றும் நகர சபை ஆகிய சட்டங்களை திருத்தம் செய்யும் வகையில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை அமுல்படுத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை பெற்றுக்கொள்வதுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மதித்து செயற்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை செயற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்பது திட்டவட்டமாக விளங்குகிறது.இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை கோரியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

22வது திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம்