(UTV | கொழும்பு) –
மத்திய அரசாங்கத்தினால் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்காகச் செயல்படுத்தப்படும் நிபுணர் குழு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தமது பணிகளை ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுளள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாவது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமனதுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழ் கட்சிகளும் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதிகள் பலர் 13ஐ நடைமுறைப்படுத்தப் போகிறோம் என கூறியிருந்தாலும், நானே தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் மாகாண சபைகளிடமிருந்து மத்தியால் பறிக்கப்பட்ட அதிகாரங்கள், மீள மாகாணத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் ஒன்றுக்கு செல்லலாம் என வலியுறுத்தியுள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணங்களுக்கு ஒப்படைப்பது தொடர்பில் நீங்கள் வழங்கிய ஐந்து நிபுணர்களுடன், நானும் சிலருடைய பெயர்களை இணைத்து செப்டெம்பர் முதலாம் திகதியில் பணியை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள உறுதிமொழி மேலும் 13 தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்த பிரதிநிதிகளையும் நிபுணர் குழுவுடன் இணைத்து ஆரம்ப நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர் சார்பில் பிரதிநிதியும், சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் செயலாளர் கலாநிதி க.விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குரு நாதன் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්