(UTV | கொழும்பு) –
எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதி குருந்தூர்மலைக்கு செல்லவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
குருந்தூர்மலை விகாரை சம்பந்தமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த விடயங்கள் பொய்யானவை என்பதை ஒப்புவிப்பதற்காகவே தாங்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார். குருந்தூர்மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் இடங்கள் தொடர்பில் உதய கம்மன்பில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்தது அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
வரலாறு பற்றிய துளியும் அறிவில்லாத, தம்மை அறிவாளிகள் என்று காட்டிக்கொள்ளும் நபர்களிடம் இருந்து எமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.வடக்கு, கிழக்கில் தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்குமாறு கோரி நாங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் யோசனை ஒன்றை கையளிக்க உள்ளோம்.
கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவமிக்க 27 இடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் அதனை விட அதிகரித்துள்ளன. இவை அழிவுக்கு உட்படுத்துவதற்காக அரச அதிகாரிகள் நீதிமன்றங்களில் பொய்யான அறிக்கைகளை வழங்கி வருகின்றனர்.தொல்லியல் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளைச் செய்ய முயற்சிக்கும் போது பிரிவினைவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தடையேற்படுத்துவதாக எங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராகச் சாணக்கியன் ராசமாணிக்கத்தையும் கலாசார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரனையும் நியமிக்கவும் வாய்ப்புள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த காலங்களிலேயே வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்கள் அழிக்கப்பட்டன. இதனால், அவர் தலைமை தாங்கும் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க ஒப்படைப்பது, நரியிடம் கோழியை வழங்கியமைக்கு ஈடானது எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්