உள்நாடு

“அனுமதி இல்லாமல்,மார்க்க வழிகாட்டல் இல்லாமல் ஜும்மா தொழுவது செல்லுபடியற்றது” உலமா சபை அறிவிப்பு

(UTV | கொழும்பு) –

ஜம்மியல் உலமா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,

கோவிட் 19 காலப்பகுதியில் சில தங்கடங்களின் காரணமாக தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ஜுமுஆக்கள் அத்தங்கடங்கள் நீங்கியதன் பின்னரும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தொடர்பாகவும், அவை மார்க்கத்தின் பிரகாரம் சரியானதா எனவும் ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள், மஸ்ஜித்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் ஜம்இய்யாவிடம் தெளிவு வேண்டிய வண்ணம் உள்ளனர்.

இலங்கைவாழ் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் தமக்கு மத்தியில் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் மார்க்க விவகாரங்களில் ஆலிம்களின் வழிகாட்டல்களுடன் ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாகக் கொண்டே செயலாற்றி வந்துள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்றுதொட்டு இன்று வரைக்கும் முஸ்லிம்களின் வாழ்வில் தொடர்புபடும் அனைத்து விடயங்களிலும் வழிகாட்டி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஓரிடத்தில் புதிதாக ஜுமுஆ ஆரம்பிக்கும் விடயத்தில் மார்க்க ரீதியாக வழிகாட்டி வருகின்றது.

ஜுமுஆ தொழுகை மார்க்கக் கடமைகளில் பிரதானமான ஒரு கடமையாகும். இது ஐவேளைத் தொழுகையை விட வித்தியாசமான முறையில் ஓர் ஊரிலுள்ள அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி மார்க்க உபதேசங்களைக் கேட்பதற்கும், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றுவதற்குமுள்ள வணக்கமாகும். இதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் சில நிபந்தனைகளும் ஒழுங்குகளும் உள்ளன.

ஓர் ஊரில் ஒரு ஜுமுஆவை நிறைவேற்றுவதே அடிப்படையாகும். எனினும், நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் மார்க்க வழிகாட்டல்களைக் கவனத்திற்கொண்டு பிறிதொரு ஜுமுஆவை நடாத்துவதற்கு அனுமதியுள்ளது.

அந்தவகையில் ஜம்இய்யா அன்றுதொட்டு இன்று வரைக்கும் ஜுமுஆ விடயமாக மார்க்க ரீதியாக வழிகாட்டலைக் கோரும்பட்சத்தில் குறித்த மஸ்ஜிதுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழு நேரடியாக விஜயம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டதன் பின்னரே மார்க்க வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகின்றது.

ஒர் இடத்தில் மார்க்க வழிகாட்டல்களை பேணாது ஜுமுஆ நடைபெறுமாயின் அந்த ஜுமுஆ செல்லுபடியற்றதாகவே ஆகிவிடும். அத்துடன் அந்த ஜுமுஆவிலே கலந்து கொள்ளக்கூடிய மக்களது ஜுமுஆவுக்கு யாரெல்லாம் அதை நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்களோ, இருக்கின்றார்களோ அவர்களே அதற்குப் பொறுப்பும் கூற வேண்டும்.

அத்துடன் குத்பாப் பிரசங்கம் நடாத்தக்கூடிய கதீப்மார்கள் மற்றும் இமாம்கள் மார்க்க வழகாட்டல்களைப் பேணாது ஜுமுஆக்கள் நடைபெறக்கூடிய இடங்களில் பிரசங்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜம்இய்யா அன்பாக கேட்டுக் கொள்கின்றது.

எனவே, பொதுமக்கள் மார்க்க ரீதியாக ஜுமுஆவை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ள இடங்களில் உங்களது ஜுமுஆக்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

மஸ்ஜித் நிர்வாகத்தோடு சம்பந்தப்படும் விடயங்களை (2022.05.11 ஆம் திகதி ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை) இவ்விணைப்பில் பார்வையிடலாம்.

https://acju.lk/news-ta/acju-news-ta/2551-jummatam?highlight=WyIyMDIyLjA1LjExIl0=

அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது சகோதரி மரணித்தது போன்ற வேதனையே இஷாலினியின் மரணத்திலும் எனக்குண்டு – ரிஷாத்

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

 “டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு” ……!!