(UTV | கொழும்பு) –
இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து அமெரிக்கா சென்ற சரத் வீரசேகரா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார்.
சிவசேனை அமைப்பின் தலைவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார். கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார்.
இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார். போரில் வெற்றிக்குப் பின்னால் மத வெறியே வரலாறு. 725 ஆண்டுகளின் முன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் அதே மத வெறியுடன் தமிழகம் வந்தான். இந்துக் கோயில்களை அழித்தான். அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தான்.
தொடர்ந்து அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் முகமதியர் ஆட்சி. இந்துக் கோயில்கள் இடிந்தன. மசூதிகள் எழுந்தன. இராமநாதபுரத்தின் பெயரே இலாலாபாத் என மாறியது. அயோத்தியில் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையான இராமர் கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு இடித்தவன் பாபர்.
அங்கே மசூதியைக் கட்டினான். பாபர் வழிவந்த அவுரங்கசீப் காசியில் அருள்மிகு விசுவநாதர் கோயிலை முற்றாக அழித்து அங்கே மசூதியைக் கட்டினான். அலாவுதீன் கில்ஜி, மாலிக் கபூர், பாபர், அவுரங்கசீப் போன்றோர் வரிசையில், போரின் வெற்றியை மத வெறியாக்குகிறார். அந்தப் படைத்தளபதிகளைப் போலவே இந்துக்களை நோக்கிக் கொக்கரிக்கிறார் சரத் வீரசேகர.
450 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் தென்கோடியில், பல்லாயிரம் ஆண்டு பழமையான, பல்லவர் திருப்பணி செய்த, சீனர் கல்வெட்டு எழுதிய, அருள்மிகு தென்னாவர நாயனார் கோயிலை கத்தோலிக்க மத வெறியோடு இடித்தவன் தளபதி தோமை சொயிசா. அங்கே உலூயிசா தேவாலயத்தைக் கட்டினான்.
416 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கத் தளபதி கான்ஸ்டன்ட்டைன் கச்ச தீவில் அருள்மிகு கச்சாபகேச்சரர் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கினான். 405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா யாழ்ப்பாணத்தில் 400 சைவக் கோயில்களை இடித்தான். அங்கே தேவாலயங்களைக் கட்டுவித்தான்.
மன்னாரில் திருக்கேதீச்சரத்தைத் தடயமே இல்லாமல் முற்று முழுதாக அழித்தான். இந்நிலையில் , மத வெறியோடு இந்துக் கோயில்களைத் தாக்கியோர் அழித்தோர் கொக்கிரித்தோர் வழியில் போரில் வெற்றி பெற்ற மதகளிப்பில், வெற்றியைக் கொண்டாடும் மெய்சிலிர்ப்பில் இலங்கை, சிங்கள புத்த நாடு என்கிறார் சரத் வீரசேகரா.
வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போல, மாறி மாறி வருவன அறியாரோ, சரத் வீரசேகரா? போரின் வெற்றிக்குப் பின்னால் நிதானமும் பெருந்தன்மையும் மாவீரன் அலெக்சாண்டருக்கு இருந்தது.
இலங்கையில் மாவீரன் எல்லாளனுக்கு இருந்தது. அத்தகைய நிதானமும் பெருந்தன்மையுமே இலங்கையில் புத்தர் கூறிய அன்பையும் அறனையும் அருளையும் அறிவையும் பெருக்கும் என்றார்.
புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கும் அவர் படு தோல்வியையே காண்பார் என
சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්