(UTV | கொழும்பு) –
இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு தொடர்பானவை என தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
33வது தேசிய இணக்க தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (18.07.2023) நீதிமன்ற அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இந்தளவு உயர்வடைந்தமை குறித்து உலகின் முன்னிலையில் நாம் வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயலொன்று இடம்பெறும் போது அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என்ற போதிலும் அதனை விடவும் அவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுவதனை தடுப்பது முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் இலங்கையில் நீதிமன்றங்களில் பதினொரு இலட்சத்து இருபதாயிரம் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இது நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ளக்கூடிய அளவு கிடையாது என தெரிவித்துள்ளார். இணக்க சபைகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிணக்குகளும் நீதிமன்ற கட்டமைப்பில் விசாரணை செய்யப்பட்டிருந்தால் இந்த வழக்குகளின் எண்ணிக்கை மேலும் மூன்ற லட்சத்தினால் அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் காலங்களில் இணக்க சபைகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්