(UTV | கொழும்பு) –
பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த வாரம் கூடிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கே பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு அனுமதி வழங்கி இருக்கிறது.
குறித்த பிரேரணை சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே அன்றைய தினம் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட இருக்கிறது. விவாதத்தை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்தை பார்வையிடுவதற்காக இலங்கை பலஸ்தீன் பாராளுமன்ற நட்புறவுச்சங்க உறுப்பினர்கள் மற்றும் இலங்கையில் இருக்கும் அரபு நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் என பலரும் அன்றைய தினம் பாராளுமன்ற கலரிக்கு வருகை தரவுள்ளனர்.
மேலும் இந்த விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆரம்பித்து வைத்து உரையாற்ற இருப்பதுடன் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්