(UTV | கொழும்பு) –
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் குருந்தூர் மலை சட்டவிரோத நீதிமன்ற உத்தரவை மீறிய கட்டுமானத்தை பார்வையிட முல்லைத்தீவு கௌரவ நீதிபதி களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.
அந்த வேளையில் இவ் வழக்குடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத கொழும்பு மாவட்ட எம்பியான சரத் வீரசேகர தனது குழுவினருடன் குருந்தூரில் பிரசன்னமாகி இருந்தார். வழக்குடன் தொடர்புபடாத வெளிநபர்கள் சம்பவ இடத்தில் கருத்துகளை தெரிவிப்பதை நீதிபதி தவிர்க்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தன் பேரினவாத அடக்குமுறை சித்தாந்தத்தை பிரதிபலித்து மிக மோசமாக நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர உரையாற்றி உள்ளார்.
தமிழ் நீதிபதி என விளித்து அச்சுறுத்தும் எச்சரிக்கை வசனங்களை குறிப்பிட்டமை மிக மோசமான இனவாதம் ஆகும். அது மட்டுமன்றி நீதிமன்றத்தின் உயரிய மாட்சிமைக்கு பங்கம் விளைக்கும் அதி தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்த வழிகோலுகின்ற வகையில் அமைந்திருக்கின்றது.
மேலும் ஆதி காலம் தொட்டு தமிழர்களால் வழிபடப்பட்டு வந்த ஆதி சிவன் கோவிலின் திரிசூலம் பற்றியும் மிகத்தவறான கருத்துக்ளை பதிவு செய்துள்ளார்.
இங்கு ஆயிரம் வருடங்களிற்கு முன்னதாகவே மிகத் தொன்மையான ஆதி சிவன் கோவில் அமைந்திருந்தையும் மிகப் பெரிய ஆவுடையார் உள்ளிட்ட சிவலிங்க பாகங்கள் நந்தி போன்றன மீட்கப்பட்டு இருந்ததையும் மேனாட்டு தொல்லியல் அறிஞர்களான எச். பி.பெல், லூயிஸ் ஆகியோர் கடந்த நூற்றாண்டிலேயே அகழ்வாராய்ச்சிகளுடன் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் இன்றும் முற்றிலும் சைவத்தமிழர் வசிக்கும் இடத்தில் அவர்களின் வழிபாட்டுரிமைக்கு சவால் விடும் செயற்பாடுகளில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அடாவடியாக ஈடுபட முனையும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகராவிற்கு நீதிமன்ற உத்தரவுகள் விசனத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.
அதன் வெளிப்பாடே நாடாளுமன்ற சிறப்புரிமையை அவமதித்து செய்து நீதிபதியை இனவாத நோக்கில் அச்சுறுத்தும் வார்த்தை பிரயோகம் அடங்கிய அவரது உரையாகும். இன மத நல்லிணக்கத்தையும் உயரிய நீதிமன்ற மாண்பையும் காக்கும் வகையில் நாட்டின் சகல முற்போக்கு சக்திகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுவதுடன் இதற்கு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாகவும் நீதிமன்ற மாண்பை மதிக்கும் நாட்டின் பிரஜைகள் சார்பாகவும் வேண்டி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் வீரசேகவுக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්