(UTV | கொழும்பு) –
அல்குர்ஆன் என்பது ஏக இறைவன் அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட புனித வேதங்களில் இறுதி வேதமாகும். அது உலகில் வாழ்கின்ற பல கோடிக் கணக்கான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய வேத நூலாக இருப்பதுடன், அப்புனித அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாக உலக முஸ்லிம்களால் மிக உறுதியாக நம்பப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை (2023.06.28 ஆம் திகதி) சுவீடன் ஸ்டொக்ஹோமில் உள்ள மஸ்ஜிதுக்கு வெளியே புனித அல்குர்ஆன் பிரதியை அவமதிக்கும் வகையில் அது எரிக்கப்பட்ட செய்தி ஊடகங்கள் ஊடாக அறியக்கிடைத்ததையிட்டு உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களும் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்களும் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இவ்வெரிப்பு சம்பவத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாதிருக்கும் வண்ணம் கடுமையான சட்ட அமுலாக்கத்தைக் கொண்டு வரும்படி சுவீடன் அரசை ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், இவ்வெரிப்பு சம்பவத்தைக் கண்டித்து இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் ஜம்இய்யா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්