(UTV | கொழும்பு) –
நாடோ அதால பாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலினால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், பலர் தொழில் நிலையற்றவர்களாக உள்ளனர், இன்னும் சிலர் போதைக்கு அடிமையாக உள்ளனர், மேலும் பலர் வறுமையால், தொழிலின்மையால் பிழையான பாதையில் பயணித்து தண்டனைக்குரிய குற்றவாளிகளாக மாறி வழக்கும் கையுமாக அலைகின்றனர். யுவதிகளுக்கான வாழ்வியல் வசதிகள் தற்போது உள்ளதா? எதுவுமே இல்லை. பல இளவயது திருமணங்களால் பல வாழ்க்கை சீரழிவுகளை யுவதிகள் அனுபவிக்கும் கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் தெரிவித்தார்.
உத்தேச இளைஞர்கள் பாராளுமன்ற சட்ட மூலத்தின் பிரதான நான்கு பிரிவுகளாக தலைமைத்துவம், ஜனநாயக அமைப்பு, பாராளுமன்ற நடைமுறை, பாராளுமன்ற உறுப்புரிமை ஆகியன காணப்படுகின்றன. எனது பிராந்தியத்தில் இளைஞர்களுக்கான தலைமையாக பெரும்பான்மையான நண்பர்கள், சகோதரர்கள் ஊடாக இப்பாராளுமன்றம் வந்திருந்தேன். இப்பாராளுமன்றம் ஊடாக நன்றிக் கடன் செலுத்த முடியுமா என அலசிக் கொண்டு சென்ற போது எந்த வாய்ப்பும் பாராளுமன்றம் ஊடகவோ, இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊடாகவோ கிடைக்கப் பெறவில்லை. இருந்த போதிலும் இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தினை வைத்துக் கொண்டு பல சேவைகளை உள்ளூர், வெளியூர் முதலீட்டாளர்கள் கொண்டு செவ்வனே செய்து முடிந்தளவு நன்றிக் கடன் செலுத்தியுள்ளேன் என்பதில் மனமகிழ்ச்சி.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக அமைப்பானது ஜனநாயக பெறுமதி, ஜனநாயக கலாச்சாரம் என்ற பிரதான அம்சங்கள் கொண்டிருந்தாலும் இந்த உயர் சபைக்கு தேசிய ஜனநாயகத்தில் என்ன கிடைத்தது என்றால் கேள்வியாகவே கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். பாராளுமன்ற நடைமுறையே மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளும் இலகு வழி. இங்கிருந்து சட்டமூலம் உருவாக்கம், கொள்கை திட்டங்கள் உருவாக்கம் என்பன நாட்டு மக்கள், இளைஞர்கள் சார்ந்துள்ளன. இவ் உயர் சபையின் ஊடாக பல புதிய சட்டமூலங்கள், புதிய கொள்கை திட்டங்களை கடந்த காலங்களில் நாம் விவாதத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் எங்களுடைய கொள்கைகள் எங்கே? சட்டமூலங்கள் எங்கே? சட்டம் வலுவாக இருந்தாலும், இளைஞர்கள் பாராளுமன்றத்தின் ஊடாக இடம்பெறும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை. அதிகாரமில்லா சபையாகவே இச்சபை இயங்கி வருகின்றது. இங்கு கொண்டு வரப்படும் சட்டங்கள், கொள்கைகள் ஒவ்வொரு துறைசார் அமைச்சின் ஊடாக பாராளுமன்றத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டால் இங்கு பல மாற்றங்கள் கொண்டு வரமுடியும்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්