(UTV | கொழும்பு) –
கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டம் அரசியல் ரீதியில் பின்தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியமைக்கான மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது, அவர்களைக் கைவிடக்கூடாது, தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதியில்லாமல் அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்ற தலைமை இல்லாமல் அநாதையாக்கப்படக்கூடாது என்பதற்காகவே. என அம்பாறை மாவட்ட மக்கள் தொடர்பில் கூட்டமைப்புக்குள்ள அக்கறை தொடர்பில் பெருமிதத்துடன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இலங்கை மிகவும் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு கண்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஊடக ஒலி, ஒளி பரப்பு சட்டமூலம் கொண்டுவரப்படவிருக்கின்றது. இந்த உத்தேச சட்டம் கொண்டு வரப்பட்டால் நாட்டிலுள்ள ஊடக குரல் நசுக்கப்படுகின்ற நிலை காணப்படும். உண்மையான விடயங்களை நாங்கள் வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறான விடயங்களை அரசு மேற்கொள்ளும்போது கடுமையாகப் பாதிப்புறுபவர்கள் தமிழ் மக்களே வேறு யாருமல்லர் என்பதை நான் இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறான சட்டங்களை இயற்றுகின்றபோது ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. அவ்வாறு மறுக்கப்பட்டால் மக்களின் வாழ்வதற்கான உரிமை நசுக்கப்படுகிறது. இதனால் மக்களின் பிலச்சினைகளை வெளிக்கொண்டு வர முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படுகிறது.
வடகொரியாவில் எவ்வாறு மக்கள் நசுக்கப்படுகின்றார்களோ அவர்களுக்கான வாழும் உரிமை எவ்வாறு மறுக்கப்பட்டு அவர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வாறு இல்லாமலாக்கப்பட்டதோ அந்த நிலைமை இலங்கையிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தச் சட்டமூலங்களை எதிர்க்க வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அது நிச்சயம் இவற்றை எதிர்க்கும். தமிழர்களோடும், தமிழ் பண்புகளோடும்,தமிழுக்காகவும் தமிழ்த் தேசத்திற்காகவும் நாம் குரல் கொடுப்போம் என்றார்.
நூருல் ஹுதா உமர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්