(UTV | கொழும்பு) –
மாகாணசபை மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் இல்லை. எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபையொன்றை அமைப்பதே தனது திட்டம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன் தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என வடக்கை மையமாக கொண்டு வெளிவரும் தமிழ் நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு இணைந்த நிர்வாக சபையா அல்லது இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான நிர்வாக சபைகளா என தமிழ் அரசுக் கட்சியினர் கேட்டனர். அது பற்றிய தெளிவான பதிலை ஜனாதிபதி வழங்கவில்லை. அப்படியான யோசனை உள்ளதாகவும், அது பற்றி தமிழ் அரசுக் கட்சியுடனும், ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் கலந்து பேசிச் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், அரசியல், காணி உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுக்கள் அமைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை தமிழ்க் கட்சிகளிடம் கையளித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.இரண்டு மாதங்களில் அறிக்கை கிடைத்து விடும் என்றும், விரைவில் தனது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜூலை மாதம் மீண்டும் பேச்சு நடத்தலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්