(UTV | கொழும்பு) – சிறுமியின் அரை நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய பெண் கைது
சிறுமியின்(16 வயதுக்குட்பட்ட) அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (29) காலை மகளிர் பொலிஸ் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சிறுமியின் குடும்பத்தினரை அச்சுறுத்திய அவர் பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளதாகவும் அவரது தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் அவரை புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
குறித்த சிறுமி தற்போது கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், இந்தச் சம்பவத்தின் மூலம் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அரைநிர்வாண புகைப்படங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அன்று தொடக்கம் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திவுலபிட்டிய துனகஹ பகுதியைச் சேர்ந்த சகுந்தலா மில்லவான எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 02ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්