உலகம்

சிகரெட்டுக்கு தடை

(UTV | நியூஸிலாந்து) –  சிகரெட்டுக்கு தடை

நியூஸிலாந்தில் எதிர்கால தலைமுறையினர் சிகரெட் வாங்க முடியாத சட்டத்தை நியூஸிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவரும் ஒருபோதும் சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது போகலாம்.

நேற்று(13) நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தின்படி, புகையிலைப் பொருட்களை வாங்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டு செல்லும். உதாரணமாக, 2050 ஆம் ஆண்டில் சிகரெட் வாங்கக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை 40 ஆக இருக்கும்.

இதனடிப்படையில், 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் ஒருபோம் சிகரெட் வாங்க முடியாத நிலை ஏற்படலாம்.புகைத்தல் அற்ற எதிர்காலத்துக்கான ஒரு படி இது என நியூ ஸிலாந்து சுகாதார அமைச்சர் அயேஷா வெரால் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மேலும் கூடுதலான காலம் உயிர்வாழ்வார்கள். புகைத்தலினால் ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செலவிடப்படும் 5 பில்லியன் நியூ ஸிலாந்து டொலர்கள் சேமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் ஏற்கெனவே புகைத்தல் எண்ணிக்கை அந்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு குறைந்துள்ளது. தற்போது வயதுவந்தவர்களில் 8 சதவீதமானோர் மாத்திரமே புகைப்பிடிக்கின்றனர். கடந்த வருடம் இது 9.4 சதவீதமாக இருந்தது.
புதிய சட்டத்தின்மூலம், 2025 ஆம் ஆண்டு இது 5 சதவீதமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நியூஸிலாந்திலுள்ள 6,000 சிகரெட் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 600 ஆக குறைப்பதையும் நியூஸிலாந்து நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனினும், இச்சட்டத்தின் மூலம் கறுப்புச் சந்தையில் புகையிலைப் பொருட்களின் விற்பனை அதிகரிக்கக்கூடும் எனவும் சிறிய கடைகளை மூட வைக்கும் எனவும் சிலர் விமர்சித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ள ஏசிரி கட்சியும் இச்சட்டமூலத்தை எதிர்த்து விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

தற்போது 75 நாடுகளில் MONKEYPOX

டிசம்பர் வரையிலும் ஊரடங்கு அமுல் தொடரும்