(UTV | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவை.
பலாலி சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்தப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்து, பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து, 11.50 மணிக்கு சென்னை நோக்கிப் புறப்படும்.
இவ்வாறு, விமான சேவை பயணிகளுக்காகவே யாழ்.நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு பலாலி விமான நிலையம் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும் எனவும்
அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும் எனவும் தேவை ஏற்படின் ரயில் நிலையம் வரையிலும் சேவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயணிக்கும் பயணிகளுக்கான ஒரு வழிக் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். மேலும் பயணப் பொதி ஒன்றுக்கு 200 ரூபா அறவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு யாழ். மாவட்ட பேருந்து நிலைய பொறுப்பதிகாரியை 076 537 8432 என்ற எண்களில் தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්