உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்!

(UTV | கொழும்பு) –     ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய தகுதியுடைய மாணவர்களை விண்ணப்பிகக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த 30 ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

அதன் படி புலமைப்பரிசில் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாதந்த குடும்ப வருமானமாக 75,000/- ரூபாவிற்கு குறைந்தவராகவும், அரசாங்க பாடசாலையில் அல்லது எவ்வித கட்டணமும் அறவிடப்படாத பாடசாலையில் கல்வி கற்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

அதனடிப்படையில் ஒரு கல்வி வலயத்தைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே கல்வி அமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதிபரிடமிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்று தமது குடும்ப பொருளாதார நிலைமை தொடர்பான கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 23.12.2022ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பின்னர் இவ்விண்ணப்ப்படிவங்கள் பாடசாலை அதிபர் ஊடாக கல்வி வலயப் பணிப்பாளரிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

இந்த விண்ணப்பங்களுள் புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதியுடைய ஆகக்கூடிய 30 மாணவர்களை கல்வி வலயப் பணிப்பாளர் தலைமையிலான குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்களை ஜனாதிபதி நிதியத்தின் www. Presidentsfund.gov.lk என்ற இணையதளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

 

Related posts

தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

இலங்கையின் பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பு

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!