(UTV | கொழும்பு) – நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்தம் செய்த நான் இன்று சர்வாதிகாரியாகவும், ஹிட்லராகவும் சித்தரிக்கப்படுகிறேன்.
அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க முடியாது, இராணுவத்தை களமிறக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்றம் அமைதியான முறையில் கூடும் சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை. மே மாதம் 09 ஆம் திகதி,ஜுலை மாதம் 09 ஆம் திகதி நாட்டில் எவ்வாறான சூழல் காணப்பட்டது என்பதை அனைவரும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். மே 09 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.
ஆனால் மே மாதம் 09 ஆம் திகதி நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றன. மக்கள் பிரதிநிதி ஒருவர் நடுவீதியில் மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கோட்டா கோ ஹோம் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயிரிழையில் உயிர் தப்பினார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது, இதன் காரணமாகவே கடும் எதிர்ப்பை தெரிவித்தேன்.
மே மாதம் 09 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தலைதூக்கினால் படித்தவர்கள் அரசியலுக்கு பிரவேசிக்கமாட்டர்கள். சண்டியர்கள் மாத்திரம் தான் அரசியலுக்கு பிரவேசிப்பார்கள்.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். ஜுலை மாதம் 09 ஆம் திகதி போராட்டத்தில் ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகை நாசமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனநாயக்திற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தை சுற்றிவளைக்க முயற்சித்தார்கள். பாராளுமன்றத்தை சுற்றிவளைத்திருந்தால் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும், போராட்ட சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம், ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்களே நாட்டில் இடம்பெற்றன.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட நான் தற்போது சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன். மே 09 ஆம் திகதி போராட்டத்தின் பின்னர் போராட்டகாரர்களினால் மகாநாயக்க தேரர்களும், சர்வ மத தலைவர்களும் அச்சுறுத்தலுக்குள்காக்கப்பட்டனர். பௌத்த மத தலைவர்களை அச்சுறுத்துபவர்கள் எவ்வாறு அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பௌத்த மதத்தை பாதுகாப்பார்கள், ஆகவே ஜனநாயகத்தை மலினப்படுத்தும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றன.
போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு. அனுமதியுடன் போராட்த்தில் எவரும் ஈடுபடலாம். அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளோம். போராட்டத்தில் ஈடுபடுங்கள் ஆனால் வாகன நெரிசலை ஏற்படுத்த வேண்டாம். போராட்டத்தில் ஈடுபட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதாக ஒருதரப்பினர் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். போரட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன், இராணுவத்தை களமிறக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவேன். அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் நல்லவராயின் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கெட்டவரானார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தற்போது இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
போராட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஊடகங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். போராட்டம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவுள்ளேன் என்றார்.