(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 2023 ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.
உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி இடம்பெற்ற வாதவிவாதங்களை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லையெனவும், என்ற போதும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் நிமால் லான்சா தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக சமிந்த விஜேசிறி மீது உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்தே அவரை நாடாளுமன்றில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் 79இற்கு அமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும், இன்று அமர்வுகளில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப் போவதில்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.