(UTV | கொழும்பு) –
ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு வாழ முடியுமான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தவேண்டும். அதற்காக நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவ.21) இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பல்வேறு சட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு தமக்கான உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன் வீதியில் இறங்கி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் தொடர்கின்றது. இத்தகைய செயல்பாடுகளால் இளைஞர்களின் சிறந்த காலத்தை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம்.
அத்துடன் நாட்டில் மனித உரிமை மீறப்படுவது தொடர்பிலும் பொருளாதார மோசடிகள் தொடர்பிலும் ஜெனிவாவிலும் சர்வதேச ரீதியிலும் எமது நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்களால் நாடு இழந்துள்ள நிதியை மீள பெற்றுக் கொள்வதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது. வரவு செலவுத் திட்டத்தில் கூட அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஊடகங்கள் மற்றும் தெரிவுக் குழுக்கள் மூலம் எத்தகைய ஊழல் மோசடிகள் தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பில் அரசாங்கம் எந்தவித அவதானத்தையும் மேற்கொள்தில்லை.
வசதி படைத்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை மூலம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய பில்லியன் கணக்கான நிதி தொடர்பில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை. அது நாட்டுக்கு எந்தளவு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதேவேளை பில்லியன் கணக்கில் பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள பணவீக்கம் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு எந்த கவலையும் கிடையாது.
அத்துடன் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு முதலீடுகளை எதிர்பார்ப்பது சாத்தியப்படாது. நாட்டை சீரழித்தவர்களே மீண்டும் புதிய முகங்களோடு கொள்கைகள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. அதேபாேன்று சர்வதேசத்தின் ஆதரவும் இல்லை. அதனால் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நாடொன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්