உள்நாடுசூடான செய்திகள் 1

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

(UTV | கொழும்பு) –

ட்சியதிகாரத்தை கைப்பற்ற பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள். மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டு அதனூடாக இலாபமடைய முயற்சிக்கிறார்கள்.

குறுகிய அரசியில் நோக்கத்துக்காக வன்முறைக்கு துணை சென்றதால் ஏற்படும் இறுதி விளைவை எதிர்க்கட்சி தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் போராட்டத்தை தூண்டிவிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளுந்தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மத்திய வங்கியின் மோசடி விவகாரத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருசில உறுப்பினர்களும் விடுபட முடியாது.

ஒருசிலர் 9ஆவது பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களை போல் கருத்துரைக்கிறார்கள். இவர்களின் பெற்றோரும் இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்று அனைத்து தவறுகளும் ஒன்று சேர்ந்துள்ளது. முழு பாராளுமன்றத்தையும் மலினப்படுத்தும் வகையில் கருத்துரைப்பதை எதிர்த்தரப்பின் உறுப்பினர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள பின்னணியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ளார் என்பதை மறந்துவிடக்கூடாது.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளபோது தான் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சவால்களை பொறுப்பேற்காமல் தலைமறைவானவர்களுக்கு மத்தியில் சவால்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.

எரிபொருள், எரிவாயு மற்றும் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்ட வேளை அரசாங்கத்தை பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்த கட்சித் தலைவர்களுக்கு மத்தியில் தனி நபராக இருந்து ஜனாதிபதி அனைத்து சவால்களையும் பொறுப்பேற்றார்.

அரசியல் கொள்கைகளை புறக்கணித்து தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமது அரசியல் பிரதிவாதி, அரசியல் ரீதியில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இருப்பினும், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம் என்பதை பொதுஜன பெரமுன என்ற அடிப்படையில் பெருமையுடன் குறிப்பிட்டுக்கொள்கிறோம். நாட்டுக்காக அரசியல் தியாகம் செய்துள்ளோம்.

ஆடை அணிந்துகொண்டா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்துள்ளீர்கள் என எதிர்த்தரப்பினர் எம்மிடம் கேட்கிறார்கள். தற்போதைய நிலையில் ஆடை அணிவதும், அணியாததும் முக்கியமல்ல.

தற்போதைய இக்கட்டான நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

பொருளாதாரத்தையும் நெருக்கடிகளையும் வெற்றிகொள்ளும் திட்டங்களை முன்வைத்தால் மறுகணமே அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக தயாராகவுள்ளோம்.

ஜனநாயக முறை ஊடாகவே முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறை ஊடாக முறைமை மாற்றத்துக்கு முற்பட்டார்கள்.

நாங்கள் எமது அரசியல் கொள்கையை மாற்றியமைத்துக்கொண்டோம். எதிர்த்தரப்பு அரசியல் பிரதிவாதியுடன் ஒன்றிணைந்துள்ளோம்.

பொருளாதார பாதிப்புக்கு அரச அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். அரச நிர்வாகம் முறையாக இடம்பெற வேண்டும் என்பதற்காக கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுவின் தலைமைத்துவ பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள மூன்று பிரதான தெரிவுக்குழுக்களின் முக்கிய பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பாராளுமன்றத்தின் ஊடாக முறைமை மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பகட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி ஒருசில அரசியல் கட்சிகள் முறையற்ற வகையில் செயற்படுகின்றன.

தீர்க்கமான நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு முக்கிய பொறுப்பு உண்டு. பிரச்சினைக்கு தீர்வு காண்பதா அல்லது பிரச்சினைகளை தீவிரப்படுத்துவதா என்பதை எதிர்க்கட்சி தலைவர் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் செயற்படுவார்களாயின், அது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாக கருதப்படும்.

ஆகவே, குறுகிய அரசியல் நோக்கத்தில் செயற்படும்போது ஏற்படும் விளைவுகளை எதிர்க்கட்சி தலைவர் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்திய இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்த முயற்சித்தபோது அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜயவீரவுடன் ஒன்றிணைந்து தெற்கில் சிவில் கலவரத்துக்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆயுதம் வழங்கியமை அனைவரும் அறிந்ததே.

இறுதியில் நேர்ந்தது என்ன? விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரியால் ரணசிங்க பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டார்.

ஆகவே, குறுகிய அரசியல் நோக்கத்தை அரசியல் போராட்டமாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு கட்டம் கட்டமாக தீர்வு எட்டப்படும் நிலையில் தற்போது ஒரு தரப்பினர் வீதியில் ‘ரணில் ரணில்’ என கூக்குரலிட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது பயனற்ற போராட்டமாகும்.

எதிர்க்கட்சி தலைவர் முன்னிலை சோசலிச கட்சியினரையும், வன்முறை போராட்டக்காரர்களையும் தூண்டி விடுகிறார். இது வரலாற்றில் பதியப்படும்.

மாணவர்களின் போராட்டத்தை அரசாங்கம் முடக்குவதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். கடந்த மே 09ஆம் திகதி முதல் நாட்டில் ஜனநாயக போராட்டத்தில் எவரும் ஈடுபடவில்லை.

மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வர முடியாதவர்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். பிரபாகரனும் இவ்வாறே செயற்பட்டார். போராட்டத்தின் ஊடாகவே பிரபாகரனும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

குறுகிய அரசியல் நோக்கத்தை விடுத்து நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

எமது அரசாங்கத்தின் ஒருசில தீர்மானங்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை மறுக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியதை எதிர்க்கட்சியினர் மறந்துவிட்டார்கள். ஆகவே, குறுகிய அரசியல் நோக்கத்தை விடுத்து எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கேசரி

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

ஐ.தே.கட்சியின் 75ஆவது ஆண்டு விழா