(UTV | கொழும்பு) –
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்கான செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும்.
மக்களுக்கு சுமையாக அமைந்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு மனசாட்சியுடைய எவரும் ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மனசாட்சியுடைய எவரும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள்.
மக்களுக்கு சுமையாக அமைந்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்கான செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும்.
இனினும் இந்த அரசாங்கத்துடன் எவரும் இணைவார்களாயின் அவர்கள் தேசத்துரோகிகளாகவே கருதப்படுவர். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறுகின்றேன். எதிர்தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இதனைத் தோல்வியடைச் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி ஆளுங்கட்சியிலுள்ளவர்களும் வரவு – செலவு திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனித்து விடப்பட்டுள்ளார். அவர் கொள்கை எதுவும் இன்றி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
அதன் காரணமாகவே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி , அரசாங்கத்திற்கு ஏற்ப செயற்படும் எவரையேனும் அந்த இடத்திற்கு நியமிக்க முயற்சிக்கப்படுகிறது. இந்த முயற்சிகள் வெற்றியளிக்க ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தி போராடும் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්