உள்நாடு

“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானது”

(UTV | கொழும்பு) – இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் தற்காலிக பொருளாதார வீழ்ச்சி மிக விரைவில் மறைந்துவிடும் என இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி அதீரா சரசன் தெரிவித்துள்ளார்.

கண்டி சிங்கள வர்த்தக முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாக கலந்து கொண்ட உதவி உயர்ஸ்தானிகர் சபையில் சிங்கள மொழியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த உதவி உயர்ஸ்தானிகர் கூறியதாவது:

“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பு மிகவும் நீண்டகாலமாக உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார, மத, கல்வி, சமூக மற்றும் வர்த்தக உறவுகள் மற்ற நாடுகளுக்கு இடையிலான உறவுகளை விட மிகவும் வலுவானவை. தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக சில பின்னடைவை சந்தித்து வருகின்ற போதிலும் நிலைமை மிக விரைவில் மீளும் என நம்புகின்றோம். ஒரு நாட்டில் சில பிரச்சினையான சூழ்நிலைகள் ஏற்பட்டால், அந்த சூழ்நிலைகளை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்வதன் மூலம் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது. அதேபோன்று இந்தியாவின் ஆதரவை இலங்கை தொடர்ந்தும் பெறும்.

சுற்றுலா வர்த்தகத்தை சரியாக நிர்வகிப்பதன் மூலம் மட்டுமே இலங்கைக்கு பெரிய பொருளாதார ஊக்கத்தை பெற முடியும். உலக சுற்றுலாத்துறையில் சிறப்பு கவனம் பெற்ற நாடு இலங்கை. இவ்வாறான சூழல்களுக்கு மத்தியிலும் கண்டி சிங்கள வர்த்தக முன்னணி போன்ற வர்த்தக சங்கங்கள் சவால்களை ஏற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்ட வேண்டும்.”

இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கண்டி சிங்கள வர்த்தக சங்கத்தினால் எமது நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்.

Related posts

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

ரணிலின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறிய பசில்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுறுத்தல்!