உள்நாடு

நாட்டின் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் : புதிய வரிகள் அறிமுகம்

(UTV | கொழும்பு) – உத்தேச உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, வரிக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதுடன், அதற்கான திருத்தப்பட்ட சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது மாதாந்தம் 2 இலட்சம் ரூபாவாக உள்ள தனிநபர் வருமான வரி எல்லையை, ஒரு இலட்சம் ரூபா வரையில் குறைப்பதற்கு இதனூடாக முன்மொழியப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீட்டுக்கு அமைய, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், வரி வருமான திரட்டல் தொடர்பாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கப்பெறும்.

இந்த வரித் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக புதிய வரிகளை விதித்தல், வரி வீதங்களை அதிகரித்தல் என்பனவற்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி அறவீடு தொடர்பான புதிய வரி விகிதங்கள் இதனூடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக KPMG கணக்காய்வு நிறுவகத்தின் வரி தொடர்பான சட்டத்தரணி சுரேஷ் பெரேரா, எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம், தனிநபர் வரி வீதத்தில் அதிகரிப்பைக் காண முடியும்.

தற்போதைய வரி வீதம் நூற்றுக்கு 6, 12 மற்றும் 18 என்ற அளவில் உள்ளது.

அதில் 18 வீதமாக உள்ள உச்சபட்ச வரி வீத எல்லை, 36 வீதம் வரையில் அதிகரிக்கும்.

அத்துடன், நிறுவனங்கள் தரப்பில், 14 மற்றும் 18 வீதமாக உள்ள வரிகள், 30 வீதமாக அதிகரிக்க உள்ளன.

சுற்றுலாத்துறை வரியானது 14 வீதமாகவும், உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான வரியானது 18 வீதமாக உள்ளது.

இந்த வரிகள் 30 வீதமாக அதிகரிக்க உள்ளதாக KPMG கணக்காய்வு நிறுவகத்தின் வரி தொடர்பான சட்டத்தரணி சுரேஷ் பெரேரா தெரிவித்தார்.

Related posts

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமனம்

வெளிநாட்டவர்களுக்கு எந்தவொரு நிலமும் இனி விற்கப்படமாட்டாது – பந்துல குணவர்தன.

“அனைத்து இனங்களின் அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்”