உலகம்

ரஷ்யாவுடன் இணையும் நான்கு உக்ரைன் பகுதிகள்

(UTV | மாஸ்கோ) – உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் வசம் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் வந்துள்ளன.

கடந்த ஏழு மாதமாக நடைபெற்று வரும் போர் மூலம் இந்த பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அவற்றை சுதந்திர பிரதேசங்களாக அங்கீகரிக்கும் ஆணைகளில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னதாக இந்த 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வது குறித்து அந்த பகுதிகளை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது.

இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான உக்ரைன் மக்கள், ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து முதல் கட்டமாக உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் சுதந்திர பிரதேசங்களாக ரஷியா அங்கீகரித்துள்ளது.

அடுத்ததாக அவற்றை அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி ரஷிய அதிபர் மாளிகையில் இன்று கோலகலமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் பகுதிகளில் ரஷியா நடத்திய வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், மக்களை கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட மோசடி என்றும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related posts

சிட்னி செல்லும் வெளிநாட்டினர் குறித்து ஆஸியின் நிலைப்பாடு

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

சீனாவில் மீளவும் ஊரடங்கு