(UTV | கொழும்பு) – சுமார் 22 லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் டன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்கோரல் எதிர்வரும் செவ்வாய் கிழமை இடம்பெறும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையினால் அண்மையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
ஒகஸ்ட் 25 ஆம் திகதி டுபாயின் பிளக் சென்ட் கொமடிடீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி கேள்வி மனுவை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதியளித்தமையை அடுத்து இவ்வாறு புதிய கேள்வி மனுவை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் விடுக்கப்பட்ட யோசனைக்கு அமைய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரியை வழங்கக் கூடிய விநியோகஸ்த்தர்களுக்கு இடமளித்து புதிய கேள்வி மனுக்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு நிறுவனத்தினால் நிலக்கரியை விநியோகிக்க முடியுமா? என்பதை கருத்தில் கொண்டு விநியோகஸ்த்தர்கள் கேள்வி மனுவை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியாக உள்ள எந்தவொரு விநியோகஸ்த்தரும் இதில் பங்கேற்க முடியும். திறந்த சர்வதேச கேள்வி மனுக்கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்தார்.