(UTV | கொழும்பு) – போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இவ்வாறான நாடுகளில் வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என பணியகம் தெரிவிக்கின்றது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக அதிகளவானோர் வெளிநாட்டு தொழில்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமையினால் விளம்பரங்களை வெளியிட்டு பணம் பெறும் மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வெளிநாட்டு வேலைக்காகச் செல்வதற்கு கடவுச்சீட்டு அல்லது பணத்தை வழங்குவதற்கு முன்னர், குறித்த அமைப்பு பணியகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ள சட்டப்பூர்வ நிறுவனமா என்பதைக் கண்டறியுமாறு பணியகம் மக்களுக்கு மேலும் தெரிவிக்கிறது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது பணியகத்தின் 24 மணி நேர தகவல் மையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989ஐ அழைப்பதன் மூலமோ பொதுமக்கள் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வமான தன்மையைப் பற்றி விசாரிக்கலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் குறித்த தகவல்களை பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
(விசேட புலனாய்வுப் பிரிவு – தொலைபேசி இலக்கம். 0112864241)