(UTV | கொழும்பு) – சிறுநீரக மாற்று சிகிச்சையின் பின்னர் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் பற்றாக்குறையால் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.பி.எம்.ரங்கா தெரிவித்துள்ளார்.
சிறுநீரக மாற்று சிகிச்சையின் பின்னர் நோயாளர்களுக்கு வழங்கப்படும் 03 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பெறப்படும் மருந்துகள் போதாது எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணம் உட்பட நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் இந்நிலைமையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறுநீரகம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் வைத்தியர் ரஞ்சுகா உகேசிறி கராப்பிட்டிய வைத்தியசாலையில் 150க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.