உள்நாடு

SLFP நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 8 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் பெறுவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அந்த தீர்மானத்திற்கு மாறாக நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர் பதவிகளை பெற்றனர். பின்னர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சாமர சம்பத் தசநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார மற்றும் சாந்த பண்டார ஆகியோர் இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றனர்.

எவ்வாறாயினும், கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நீதிமன்றில் அறிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் எதிர்வரும் நாட்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், ஷான் விஜயலால் டி சில்வா மற்றும் துஷ்மந்த மித்ரபால ஆகியோருக்கு இதுவரை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு